search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் கொலை"

    நெல்லையில் மணல் கடத்தலை தடுத்த ஏட்டு கொலை வழக்கில் கைதான 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி யூனியனுக்கு உட்பட்டது வடக்கு விஜய நாராயணம். இங்குள்ள போலீஸ் நிலையத்தில், போலீஸ் சூப்பிரண்டு அலுவலக தனிப்பிரிவு ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் ஜெகதீஷ்துரை (வயது 33).

    இவர் கடந்த ஆண்டு மே மாதம் 6-ந்தேதி இரவு ரோந்து பணியை முடித்து விட்டு போலீஸ் நிலையத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். கக்கன்நகர் விலக்கு பகுதியில் வந்தபோது எதிரே ஒரு டிராக்டர் மணல் திருடி கொண்டு வேகமாக சென்றது. உடனே ஜெகதீஷ் துரை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மணல் திருட்டு கும்பல் ஜெகதீஷ் துரை மீது டிராக்டரை கொண்டு மோதினார்கள். பின்னர் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தனர். இதையடுத்து விபத்து நடந்தது போன்று போட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர்.

    இதுபற்றி விஜய நாராயணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன், கிருஷ்ணன், முருகப்பெருமாள், மணிக்குமார், ராஜாரவி, அமிதாப்பச்சன் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு நெல்லை மாவட்ட 4-வது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட முருகன், கிருஷ்ணன், மணிக்குமார், ராஜாரவி, அமிதாப்பச்சன் ஆகிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். #tamilnews
    ஸ்ரீபெரும்புதூர் அருகே போலீஸ்காரர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    வேலூர் மாவட்டம் பொய்கை கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது40).

    இவர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். அந்த பகுதியிலேயே அறை எடுத்து தங்கி இருந்தார். இவர் பணியில் சேர்ந்து 1 வாரமே ஆகிறது.

    இந்த நிலையில் சுங்குவார் சத்திரம் திருமங்கலம் கருப்புகை பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் போலீஸ்காரர் மோகன்ராஜ் பிணமாக கிடந்தார்.

    அவரது தலையில் பலத்த காயம் இருந்தது. அவரை மர்ம ஆசாமிகள் தலையில் அடித்தும் மதுபாட்டிலை உடைத்து கழுத்தில் குத்தியும் கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து சுங்குவார் சத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. (பொறுப்பு) பஞ்சாட்சரம், இன்ஸ்பெக்டர் ஜான்விக்டர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    மோப்ப நாய் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. அது சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் ஓடி நின்றது. தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீஸ்காரர் மோகன் ராஜை யார் கொலை செய்தது என்பது தெரியவில்லை. மது குடித்தபோது ஏற்பட்ட மோதலில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொலையுண்ட போலீஸ்காரர் மோகன்ராஜுக்கு அன்பு ரோஜா என்ற மனைவியும், அஸ்வின் என்ற மகனும், அவினாசி, அஜயா என்ற மகள்களும் உள்ளனர். #tamilnews
    ×